கிராம ஊராட்சி சாலை மேம்பாட்டு பணிக்களுக்கான டெண்டர் ரத்து : அதிமுக அரசுக்கு சம்மட்டி அடி :மு.க.ஸ்டாலின் அறிக்கை..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, பழனிசாமி அரசுக்குக் கொடுக்கப்பட்ட சம்மட்டி அடி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்துள்ள மகத்தான தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.

அரசியல் சட்டம் தந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட நினைத்த அதிமுக அரசுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி. தொடர்ந்து நடத்திவரும் ஊழல் நிர்வாகத்தின் ஒருகட்டமாக, பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி, தனது “கைப்பாவைகளாக” மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஆக்கி, கொள்ளையடிக்க நினைத்த முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஊழல் அரசின் தலையில் ஓங்கி வைக்கப்பட்டுள்ள சரியான குட்டு.

நீண்ட நாட்களாகத் தேர்தலை நடத்தாமல் – தொடர் சட்டப் போராட்டத்தின் விளைவாக, இறுதியில் தேர்தல் நடைபெற்று – ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்ட பிறகும் – அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்ற பிறகும் – தெருவிளக்குகள் போடுவதில் இருந்து – குடிநீர்க் குழாய்கள் அமைப்பது வரை, அனைத்து அதிகாரங்களையும் பறித்து, அப்பணிகளைத் தானே மேற்கொள்வதன் மூலம், அதிமுக அரசு, அபகரித்துக் கொள்ள நினைத்தது கீழான செயல்.

“இ-டெண்டர்” என்ற ஒரு “ஊழல் டெண்டர் நடைமுறை” மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர்களைப் பயன்படுத்தி – ஊராட்சி நிதியில் மெகா ஊழல் செய்தும் – செய்யவும் துடித்து வருகிறது அதிமுக அரசு. இதனால்தான் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்.

இந்த வழக்கு விசாரணையின்போது, “ஊராட்சிகளுக்கு டெண்டர் விடும் அனுபவம் இல்லை” என்றெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களைப் பெரிதும் அவமதிக்கும் வகையில், உயர் நீதிமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறையே வாதிட்டது, அமைச்சரின் ஊழலுக்கு ஒத்துழைக்கும் அசிங்கம். ஊராட்சி மன்றங்களில் நடைபெற வேண்டிய கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குக் கூட – நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் இணைந்து பணிகளை முடிவு செய்தது அராஜகத்தின் உச்சகட்டம்.

அந்தந்தப் பகுதி ஊராட்சி மன்றங்களுக்கே தெரியாமல் – தீர்மானத்தையும் பெறாமல் தன்னிச்சையாகத் தேர்வு செய்தது – 14ஆவது நிதிக்குழு இப்பணிகளுக்காக அளித்த 2300 கோடி ரூபாய் நிதியிலும்- மெகா ஊழல் செய்ய அமைக்கப்பட்ட உள் கூட்டணி. நல்லவேளை! அந்த ஊழல் கூட்டணி, இந்தத் தீர்ப்பால் தகர்க்கப்பட்டு – ஊராட்சி மன்றங்களின் அதிகாரம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், “மாவட்ட அளவில் டெண்டர் விடும் அரசின் வழிகாட்டுதல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை ஓரங்கட்டுகிறது . இதை அனுமதித்தால் – இந்த அமைப்புகள் ஏதோ அரசு செய்யும் வேலைகளை வேடிக்கை பார்க்கும் அமைப்புகளாக மாற்றப்பட்டு- பஞ்சாயத்து ராஜ் நடைமுறையின் நோக்கத்திற்கு எதிராக அமையும். ஊராட்சி மன்றங்கள் டெண்டர் விட முடியாது என்று அரசும், அதிகாரிகளும் சத்தியப் பிரமாண வாக்குமூலமாகவே இந்த நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஊராட்சி மன்றங்கள் தங்களுக்குக் கீழ்ப்படிந்தவை என்ற அரசின் மனவோட்டத்தைக் காட்டுகிறது. இந்த எண்ணவோட்டத்தை அரசு கைவிட்டு – ஊராட்சி மன்றங்களை அரசியல் சட்டப்படி சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ள வரிகள் – பஞ்சாயத்து ராஜ் நடைமுறையைப் போற்றிப் பாதுகாக்கும் வரிகள்! இவற்றைச் சுட்டிக்காட்டி, “ஊராட்சி மன்றங்களின் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் டெண்டர் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது.

இனி, ஊராட்சி மன்றங்கள் தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய பணிகளைக் கிராமசபையில் வைத்து முடிவு செய்து ஊரக வளர்ச்சித்துறைக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய நிதிக்குழுவின் நிதி பயன்படுத்தப்பட வேண்டும்” என்றும், “தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்கள்தான் 14ஆவது நிதிக்குழு நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும்” என்றும் அறுதியிட்டுக் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் இப்படியொரு பேக்கஜ் டெண்டர் முறையை அறிமுகப்படுத்தி – அதற்கும் சில மாவட்டங்களில் நீதிமன்றம் தடை பிறப்பித்திருக்கிறது. ஆனாலும், திருந்தாத அமைச்சர் வேலுமணி, இப்போது ஊராட்சி சாலைப் பணிகளிலும் ஊழலில் நனைய – ஊராட்சி மன்றங்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது வருத்தமளிக்கிறது.

ஆகவே, இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் – 14ஆவது நிதிக்குழு நிதியிலான சாலை மேம்பாட்டுப் பணிகளாக இருந்தாலும் சரி, ஜல் ஜீவன் மிஷன் திட்டப் பணி நிதிகளாக இருந்தாலும் சரி, ஊராட்சி மன்றங்களுக்கே ஒதுக்கிட வேண்டும் என்றும் – ஊராட்சி மன்றங்களில் நடைபெறும் பணிகளுக்கு மாவட்ட அளவில் – மாவட்ட ஆட்சித் தலைவர்களை வைத்து “இ-டெண்டர்” விடும் முறையை இத்தோடு மூட்டை கட்டித் தூக்கியெறிய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

உள்ளாட்சித் துறை அமைச்சரின் ஊழல்களுக்குத் துணை போகும் நோக்கில், 14ஆவது மத்திய நிதிக்குழு வழிகாட்டுதலுக்கு எதிராக – ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் வழிகாட்டுதல் வழங்கிய ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளர், ஊராக வளர்ச்சித் துறை இயக்குநர் – அவற்றைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றி ஊழலுக்குத் துணை போகும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் யாரும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம்..

தமிழகத்தில் இன்று புதியதாக 5,185 பேருக்குக் கரோனா தொற்று உறுதி…

Recent Posts