முக்கிய செய்திகள்

ஜிசாட் – 6ஏ செயற்கைகோளுடன் ஜிஎஸ்எல்வி-எப் 08 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது..

ஜி.எஸ்.எல்.வி எப் 08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைகோளை திட்டமிட்டபடி ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ விண்ணில் ஏவியது. தகவல்தொடர்பு சேவைக்கு முக்கியத்துவம் அளித்தும் அதை மேம்படுத்தவும் பயன்படும் இந்த செயற்கைகோள் 10 ஆண்டுகள் விண்ணில் வலம் வரும் தன்மை கொண்டது. பருவநிலை மாற்றத்தை அறியும் வகையில் இந்த புதிய செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.எல்.வி எப் 08 ராக்கெட்டானது 49.1 மீட்டர் உயரமும், 415.6 டன் எடையும் கொண்டது. இதில் புதிய தொலைதொடர்பு செயற்கைகோளான ஜிசாட் 6-ஏ ஜியோசைன்ரோனஸ் 2140 எடை கொண்டதாகும். ஏற்கனவே இஸ்ரோ அனுப்பிய ஜிசாட் 6 செயற்கைகோளை விட இந்த செயற்கைகோள் சற்று எடை அதிகமானதாகும். மேலும் இது உயர் சக்திகொண்ட எஸ்-பேண்டு செயற்கைகோளாகும்.

இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கி.மீட்டர் தூரமும், குறைந்தபட்சமாக 170 கி.மீட்டர் தூரமும் கொண்ட சுற்றுவட்ட பாதையில் பூமியை சுற்றிவரும். தகவல் தொடர்பு மற்றும் தொலை தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-6ஏ செயற்கைகோளானது, ஜி.எஸ்.எல்.வி எப் 08 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் நேற்று மதியம் 1.56 மணிக்கு தொடங்கியது.
இதையடுத்து இன்று மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவியது. செயற்கைகோளில் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துவதற்கான 24 சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் தகவல்தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டத்தில் மிகப்பெரிய ஆண்டனா ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது.

இது செல்போன் மற்றும் அதற்கு சிறிய மின்னணு சாதனங்களில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்களின் முழு அளவை பெற்று தரும் வசதியை கொண்டுள்ளது. இந்த என்ஜினில் மைனஸ் 183 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஆக்சிஜன், மைனஸ் 253 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஹைட்ரஜன் ஆகியவை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் திரவ நிலையில் இருக்கும். ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்பாக 30 வினாடிகள் வரை இந்த எரிபொருள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் தொடர்பை டிஜிட்டல் முறையில் சேகரிப்பது, தேடல் மற்றும் மீட்பு சேவைகளுக்கு முக்கியமானதாக பயன்படும் ஜி.எஸ்.எல்.வி எப் 08 ராக்கெட்டானது இஸ்ரோ ஏவும் 12வது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டாகும். ஏற்கனவே, 7 முறை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 4 முறை இது தோல்வியில் முடிந்துள்ளது. எனவே 8வது முறையாக ஜிஎஸ்எல்வி-எப் 08 ராக்கெடை இஸ்ரோ விஞ்ஞானிகள் வி்ண்ணில் செலுத்தியுள்ளனர்.