முக்கிய செய்திகள்

சரியும் ஜிஎஸ்டி வரி வசூல்!

ஜிஎஸ்டி வரி வசூல் மந்தமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாத ஜி எஸ் டி வசூல் 83 ஆயிரத்து 346 கோடி ரூபாயாக  சரிந்துள்ளது. ஜூலையில் 95,000 கோடியாகவும், ஆகஸ்டில் 91,000 கோடியாகவும், செப்டம்பரில் 93 ஆயிரத்து 141 கோடியாகவும், அக்டோபர் மாதத்தில் 95 ஆயிரத்து 131 கோடியாகவும் இருந்த ஜி எஸ் டி வசூல் நவம்பர் மாதம் 27 ஆம் தேதிவரை 83 ஆயிரத்து 346 கோடி ரூபாய் மட்டுமே வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 50 லட்சத்து 10 ஆயிரம் பேர் வரி தாக்கல் செய்துள்ளதாகவும் இதன் மூலம் 83 ஆயிரத்து 346 கோடி ரூபாய் வரி வசூலானதாகவும் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் 10 ஆயிரத்து 806 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இழப்பீடாக வழங்கப்பட்டதாகவும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 13 ஆயிரத்து 695 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சரக்குகளின் வரி ஜி எஸ் டி யில் குறைக்கப்பட்டுள்ளதால் அரசின் வருவாயும் குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GST Collection Droped