ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை களங்கப்படுத்த எடுக்கும் ஒரு முயற்சியை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும்.
ஆகவே எச்.ராஜா மீது தானாக முன் வந்து வழக்குப்பதிவு என உயர் நீதிமன்றம் விளக்கியுள்ளது.
நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய பிஜேபி தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அக்டோபர் 22-ம் தேதிக்குள் கட்டாயம் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் குறித்த ஹெச்.ராஜாவின் கருத்து குறித்து தானாக முன்வந்து நீதிமன்ற நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அமர்வில் வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
ஆனால் அதற்கு மறுத்த நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என தெரிவித்துவிட்டனர்.
ஆனால் வழக்கறிஞர்கள் முறையீடு இல்லாமல் தானாக முன்வந்து நீதிபதிகள் சி.டி.செல்வம், நிர்மல்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்படி உயர் நீதிமன்றம் பற்றிய கருத்து குறித்து அக்டோபர் 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
தானாக முன்வந்து வழக்கை எடுத்தது குறித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அவர்களது உத்தரவில் கூறியிருப்பதாவது:
“பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்குகளை தானாக முன்வந்து எடுக்கக்கூடாது என்றும், சக நீதிபதிகள் அவமானப்படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளே எடுக்கட்டும் என சில நீதிபதிகள் மறுத்துவிடுவார்கள் அல்லது காத்திருப்பார்கள்.
ராஜாவின் வீடியோ உலகம் முழுக்க பரவியது என்றாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்தது என்பதால் மதுரை கிளையில் பார்த்துக் கொள்ளட்டும் என சிலர் நினைக்கக்கூடும்.
காவல்துறை ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளதால், அந்த விசாரணை நல்ல முறையில் முடியும் என காத்திருப்பவர்களும் இருப்பார்கள்.
ஆனால் அரசும், காவல்துறையும் போகிற போக்கில் மறப்போம், மன்னிப்போம் என விஷயத்தை மறந்து விடுவார்கள்.
நீதி பரிபாலனம் செய்வதில் நீதிபதிகள் தான் அச்சாணி என்பதை உணர்ந்து, நீதித்துறையின் கண்ணியத்தை காப்பது நீதிபதிகளின் தலையாய கடமை. எனவே உச்ச, உயர், கீழமை நீதிமன்ற மாண்பை காக்க வேண்டியதும் கடமை.
ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை களங்கப்படுத்த எடுக்கும் ஒரு முயற்சியை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும்.
அதனால் திருமயம் பகுதியில் ஹெச்.ராஜா பேசிய நீதிமன்றம் குறித்த பேச்சு தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை எடுக்கிறோம்.
அக்டோபர் 22-ம் தேதிக்கு முன்னர் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு சி.டி.செல்வம் அமர்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.