உணர்ச்சி வசப்பட்டு பேசி விட்டேன்: உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ஹெச்.ராஜா

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வாய்தவறிப் பேசி விட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஹெச்.ராஜா பல்வேறு விவகாரங்கள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது உயர்நீதிமன்றத்தையும் அவர் அவதூறாக பேசினார்.

இதுகுறித்து நீதிபதி டி.செல்வம் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் ஹெச்.ராஜாவுக்கு உத்தரவிட்டது. இதுதொடர்பாக அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் வீடு பூட்டப்பட்டிருப்பதாக திரும்பி வந்ததது. 

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரான ஹெச்.ராஜா, தாம் உணர்ச்சி வசப்பட்டு வாய்தவறி பேசி விட்டதாகவும், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தனர்.

ஹெச்.ராஜைவைப் போல் மற்றவர்கள் யாராவது இதேபோல் பேசி விட்டு நீதிமன்றத்தில் வந்து மன்னிப்புக் கோரினால்  அவர்கள் மன்னிக்கப்படுவார்களா என சில மூத்த வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

H Raja renders an apology before Madras HC