எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வலியுறுத்தும் விதிமுறை மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
எச்1பி.விசா விதிமுறைகளை இறுக்கம் செய்தது நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 7,50,000 இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் எச்1பி விசா நீட்டிப்பு விதிமுறைகளை இறுக்கும் கொள்கைகளை அமல்படுத்தப் போவதாக செய்திகள் எழுந்ததையடுத்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறையின் (USCIS) இந்த அறிவிப்பு வந்துள்ளது.
“எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற நிர்பந்திக்கும் விதிமுறை மாற்றத்தை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை பரிசீலிக்கவில்லை. இதற்குரிய சட்டத்திலிருக்கும் விதியை வேறு வகையில் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று உணரப்படுகிறது, இச்சட்டத்தின் அசலான விதிப்படி எச்1பி விசா நீட்டிப்பு வழங்க வேண்டும்” என்று குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து 6 ஆண்டுகளுக்கும் கூடுதலாக எச்1பி விசா நீட்டிப்பு வழங்க முடியும்.
இந்நிலையில் விசா நீட்டிப்பை ரத்து செய்யும் எந்த கொள்கையையும் குடியேற்றத்துறை பரிசீலிக்காது. அழுத்தம் காரணமாக குடியேற்றத்துறை தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது என்ற செய்திகள் முற்றிலும் தவறானவை, என்று செய்தித் தொடர்பாளர் ஜானதன் விதிங்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இத்தகைய எச்1பி விசா கெடுபிடிகள் இந்தியா, அமெரிக்கா இரண்டுக்குமே மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாஸ்காம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது.
பொதுவான வகைமையின் கீழ் அமெரிக்கா 65,000 எச்1பி விசாக்களையும் உயர்கல்வி விண்ணப்பதாரர்களுக்காக 20,000 எச்1பி விசாக்களையும் அளிக்க வேண்டும் என்பது அமெரிக்க நாடாளுமன்ற கட்டாயமாகும்.
ட்ரம்ப் அதிபராவதற்கு முன்பிருந்தே எச்1பி விசாவை தனது தேர்தல் பிரச்சார உத்தியாகக் கடைபிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.