பெற்றோரிடமிருந்து விடுவிக்கப்பட்ட ஹாதியா!

லவ் ஜிஹாத் வழக்கில் கேரளப் பெண் ஹாதியாவை பெற்றோரிடம் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். அத்துடன் ஹாதியாவின் கோரிக்கையை ஏற்று சேலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் தங்கிப் படிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கி உள்ளனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திங்களன்று ஹாதியாவை பாதுகாப்புடன் தமிழ்நாட்டில் உள்ள சேலத்துக்கு விரைவில் அனுப்பிட ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டது.

சேலம் ஹோமியோபதி கல்லூரி டீனை ஹாதியாவின் பாதுகாப்பாளராக நியமித்தது உச்ச நீதிமன்றம். மேலும் எதுவும் சிக்கல் தொடர்ந்தால் தங்களை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹாதியாவை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொண்டு அவர் தங்குவதற்கு விடுதி வசதிகளை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹாதியாவுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் 2 மணி நேர விசாரணையின் போது ஹாதியா, தான் தன் கணவன் ஷபின் ஜஹானுடன் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். இந்த வழக்கை நீதிபதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாம் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

முதலில் மதம் மாறிய ஹாதியா, பிறகு முஸ்லிம் நபரைத் திருமணம் செய்து கொண்டார். இது லவ் ஜிஹாத் என்று கூறி கேரள உயர் நீதிமன்றம் ஹாதியா-ஜஹான் திருமணத்தை செல்லாது என்று அறிவித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தை ஹாதியா நாடினார்.

இந்நிலையில் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்ற உத்தரவைத் தடைச் செய்யக் கோரி ஹாதியாவின் கணவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

இடைக்கால ஏற்பாடாக ஹாதியா தனது ஹோமியோபதி படிப்பை தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

 

Hadiya freed from parents’ custody