ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலின இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடையவே டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காததை அடுத்து, நேற்று அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் உடலை வலுக்கட்டாயமாக ஹத்ராஸுக்கு இரவோடு இரவாகக் கொண்டு வந்த போலீஸார், இன்று அதிகாலை தகனம் செய்தனர். போலீஸார் வலுக்கட்டாயமாக உடலைத் தகனம் செய்தனர் என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் விருப்பத்துடனே தகனம் செய்யப்பட்டது என போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத்தை விமர்சித்துள்ளார்.
ட்விட்டரில் பிரியங்கா காந்தி கூறியதாவது:
“நான் ஹத்ராஸ் பெண்ணின் தந்தையிடம் தொலைபேசியில் பேசியபோது தனது மகள் இறந்துவிட்டதைக் கூறி அழுதார். அந்த அழுகுரலை நான் கேட்டேன். தன்னுடைய மகளுக்கு நீதி வேண்டும் என்று மட்டுமே கேட்டார். பாதிக்கப்பட்ட தனது பெண்ணின் உடலை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று கடைசியாக இறுதிச்சடங்கு செய்யும் தந்தையின் வாய்ப்பு கொள்ளை அடிக்கப்பட்டது.
பதவி விலகுங்கள் ஆதித்யநாத். உங்கள் அரசு பாதிக்கப்பட்ட பெண்ணையும் குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட ஒவ்வொருவரின் உரிமையைப் பறிப்பவர்களுக்குத் துணைபோகிறது. நீங்கள் முதல்வராகத் தொடர்வதற்கு தார்மீக உரிமை இல்லை.
பாதிக்கப்பட்ட பெண் உயிருடன் இருக்கும்போது அவரை உ.பி. அரசு பாதுகாக்கவில்லை. அந்தப் பெண் தாக்கப்பட்டபோது, சரியான நேரத்துக்குச் சிகிச்சையளிக்கவி்லலை. அந்தப் பெண் உயிரிழந்தபின், அவரின் குடும்பத்தினர் மகளுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கு உரிமைகளையும் பறித்துக்கொண்டு, பாதிக்கப்பட்டவருக்கு அவமரியாதை செய்துள்ளது உ.பி. அரசு.
ஒட்டுமொத்தமாக மனிதநேயமற்று ஆதித்யநாத் நடக்கிறார். குற்றங்களைத் தடுக்காமல் கிரிமினல் போல் நடக்கிறார். அராஜகங்களைத் தடுக்கவில்லை, ஆனால், அப்பாவிக் குழந்தைகள், குடும்பத்தினர் மீது அட்டூழியம் செய்கிறார்கள். யோகி ஆதித்யநாத் ஆட்சியில் நீதியில்லை, அநீதி மட்டுமே இழைக்கப்படுகிறது’’.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.