ஹாத்ரஸ் மாவட்டத்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண்ணுக்கு நீதிதான் தேவை. அவதூறு அல்ல என்று பாஜகவை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவரின் உடலுக்குப் பெற்றோர் இறுதிச்சடங்குகூட செய்யவிடாமல் போலீஸார் வலுக்கட்டாயமாக பெட்ரோல் ஊற்றித் தகனம் செய்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாகி பல்வேறு மாநிலங்களி்ல் போராட்டம் நடந்து வருகிறது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் இந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசைச் சேர்ந்த சிலர், பெண்களுக்கு எதிரான கொடுமைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றம் சாட்டி புதிய கருத்தை உருவாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “ஹாத்ரஸ் சம்பவத்தில் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்ணின் ஒழுக்கத்தை அவதூறு செய்து கருத்தை உருவாக்குகிறார்கள். அந்தப் பெண்ணுக்கு எதிராக நடந்த குற்றத்துக்கு அவர்தான் பொறுப்பு என்று கூறுவது பிற்போக்குத்தனம்.
ஹாத்ரஸில் கொடூரமான குற்றம் நடந்து தலித் பெண் கொல்லப்பட்டுள்ளார். அவரின் உடல் குடும்பத்தாரின் இறுதிச்சடங்கு கூட செய்யப்படாமல் எரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு நீதிதான் தேவை. அவதூறு அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.