சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது..


சென்னை மவுலிவாக்கத்தில் வசித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24) கற்பழித்து கொலை செய்தான்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த செப்டம்பரில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ஐகோர்ட்டு ரத்துசெய்து ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து, அங்கிருந்து வீட்டை காலி செய்து குன்றத்தூருக்கு தனது பெற்றோருடன் சென்றார் தஷ்வந்த்.

கடந்த வாரம் குடிக்க பணம் கேட்டு தரமறுத்த தாய் சரளாவை கொன்று விட்டு 25 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச்சென்றான். தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் அங்கு வந்து சரளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

தலைமறைவான தஷ்வந்தை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். இதையடுத்து, மும்பை பாந்த்ரா பகுதியில் மறைந்திருந்த தஷ்வந்தை தமிழக போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதற்கிடையே, ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் நேற்று மும்பையில் போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்றான். அவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், மும்பையில் தலைமறைவான ஹாசின் குற்ற்வாளி தஷ்வந்தை தமிழக போலீசார் இன்று மீண்டும் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மும்பை பாந்த்ரா பகுதியில் தப்பியோடிய தஷ்வந்தை மும்பை போலீசாருடன் இணைந்து தேடிவந்தோம். அங்கிருந்து தப்பிச்சென்ற தஷ்வந்தை அந்தேரி பகுதியில் மடக்கிப் பிடித்து கைது செய்தோம்.

கைது செய்யப்பட்ட அவனை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் சனிக்கிழமைக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என மும்பை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அவனை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல மேலும் ஒரு தனிப்படை போலீசார் மும்பைக்கு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.