முக்கிய செய்திகள்

தமிழக போலீசாரில் ஆர்டர்லிகளே இல்லையா?… உண்மைய சொல்லுங்கப்பா: நீதிபதி காட்டம்

தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்த பதிலை, நீதிபதி பிரபாகரன் ஏற்க மறுத்துள்ளார். காவல்துறை கூறுவதில் உண்மையில்லை என்று கண்டித்த அவர், சரியான தகவல்களை விரிவான மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

காவலர்களின் குறைகளை தீர்க்க நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், உயரதிகாரிகளுக்கு ஆர்டர்லிகளாக யாரும்  பணியமர்த்தப்படுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.  பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மட்டுமே காவலர்கள் பணியர்த்தப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் காவல்துறை பணியை விட்டு 8 ஆயிரத்து 158 பேர் விலகிச் சென்றுள்ளதாகவும்,  520 பேர் பல்வேறு புகார்களின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 296 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சாலை விபத்து, உடல்நலக்குறைவு போன்ற காரணங்களால் 3 ஆயிரத்து 32 காவலர்கள் மரணமடைந்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆர்டர்லி முறை ஒழிப்பு அரசாணை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைப் படித்துப் பார்த்த நீதிபதி கிருபாகரன், பதில் மனுவில் கூறப்பட்ட விவரங்கள் உண்மையாகத் தோன்றவில்லை என்றும், ஆர்டர்லி முறை தற்போது வரை ஒழிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கூறினார்.  1990-ல் ஓய்வுபெற்ற காவல் துறை உயர் அதிகாரிக்கும், குற்றப்பின்னணியைக் கொண்ட அரசியல் கட்சியைச் சார்ந்த ரவுடிக்கும் ஆர்டர்லி முறையில் காவலர்கள் தற்போதும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். எவ்வளவு பேர் ஆர்டர்லி முறையில் உள்ளனர் என்றும், அதிகாரிகளுக்கான அரசு வாகனங்களில் எத்தனை வாகனங்கள் குடும்பங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்றும் தமிழக அரசும், காவல்துறையும் விரிவான பதிலை அளிக்குமாறு நீதிபதி உத்தரிவிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.