கோடை வெயிலின் கொடுமை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் அனல் காற்றின் கடுமை நாளை முதல் சற்று தணியய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை, வேலூர், திருத்தணி, திருச்சி, மதுரை போன்ற 14 நகரங்களில் இரண்டு நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் தகித்தது.
இந்த நிலையில், அனல் காற்றின் தாக்கம் நாளை முதல் சற்று குறைய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பது மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.
தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் அனல் காற்று வீசும் எனக் கூறப்பட்டுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 செண்டி மீட்டர், தேனி மாவட்டம் மஞ்சளாறில் 4 செண்டி மீட்டர், ராசிபுரத்தில் 3 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் இன்று அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.