அடுத்த 2 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை, பெருவெள்ளத்திற்கு 488 பேர் பலியாகினர்.
இந்நிலையில் அந்த மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு வரும் 25 – 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகம் தெரிவிக்கையில், இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு 25, 26 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது 64.4 மிமீ முதல் 124.4 மிமீ வரை மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் என்றால் மிகக் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மஞ்சள் அலர்ட் என்றால் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். க்ரீன் அலர்ட் என்றால் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்
இதையடுத்து மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் விழிப்புடன் இருக்க முதலமைச்சர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 9ஆம் தேதி, ஆசியாவின் மிகப்பெரிய அணையான இடுக்கி அணையில் இருந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட நீரால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த மாத பெருவெள்ளத்திற்கு பிறகு, மத்திய அரசு மற்றும் உலக வங்கி அதிகாரிகள் கேரள மாநிலத்தின் 28 அணைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
தங்கள் மாநிலத்தை பேரழிவிலிருந்து மீட்டெடுக்க ரூ.4,700 கோடி இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.