தமிழகத்தில் பரவலாக மழை: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை  மழை பெய்தது. 

சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் மற்றும் கொளத்தூர், வடபழனி, முடிச்சூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சுற்றுவட்டாரத்தில் மாங்காடு, குன்றத்தூர், போரூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே லேசான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

இராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரமாக மிதமான மழை பெய்தது. கடந்த 4 ஆண்டுகளாக மழை இல்லாமல் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை ஆறுதலைத் தந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அதன் கீழ்பகுதியான குட்டியாறு பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான வாழை மற்றும் ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் புகுந்தது. 

இதனிடையே, கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:

வடமேற்கு வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது மேலும் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிதமான கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் லேசான மழை பெய்யும்.

மீனவர்கள் இரண்டு நாட்கள், வடக்கு, மத்திய வங்கக்கடல், அந்தமான் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 18.செ.மீ, சின்னக்கல்லாரில் 17 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு கூறினார்.

Heavy rain warning to 5 districts