முக்கிய செய்திகள்

விமானத்தில் உயர் ரக வகுப்புகளில் முதல்வர், அமைச்சர்கள் பயணம் செய்யக்கூடாது: கிரண்பேடி உத்தரவு..


நிதி சிக்கல் எதிரொலியாக விமானங்களில் உயர் ரக வகுப்புகளில் ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை அனைவரும் பயணம் செய்யக்கூடாது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நிதி நிலை தொடர்பாக பலவித சர்ச்சைகள் நிலவி வருகிறது. அதிகளவில் கடன் தொகை திருப்பி தர வேண்டிய சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று மாலை வெளியிட்ட உத்தரவு தொடர்பாக வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவலில், ”ஆளுநர், அமைச்சர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள் வரை அரசு தொடர்பான பயணப்படும் அனைவரும் விமானத்தில் உயர் ரக வகுப்புகளில் பயணம் செய்யக்கூடாது. பிசினஸ் கிளாஸில் விமானப் பயணம் அவசியமாகத் தேவையில்லை.

ஒவ்வொரு ரூபாயும் சேமிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இது மக்கள் பணம். அதனால்தான் உயர் ரக வகுப்புக்கு பதில் சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.

தற்போதைய சூழலில் ஒவ்வொரு ரூபாயும் முக்கியம். அத்துடன் பட்ஜெட் வரம்புக்கு உட்பட்ட நிதி இருந்தால்தான் டெண்டர் விடப்படவேண்டும்.அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள் நிதி, சீரமைப்பு கடைபிடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரி நிதிநிலையைக் கருத்தில் கொண்டு தலைமை செயலர் உடன் கலந்து ஆலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.