ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செயய் குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசு படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி பெரும் போராட்டம் வெடித்தது. அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. அந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து ஆணையிட்டனர். அதேசமயம் இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்துது.
இந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்ய தனிக்குழுவை அமைக்க வேண்டும் என வேதாந்தா நிறுவத்தின் சார்பில் கோரப்பட்டிருந்தது. இந்த உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை பராமரிக்க ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேதாந்தா குழுவின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். இந்த வழக்கு விசாரணை ஜூன் 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.