இமாச்சலப் பிரதேசத்தில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்து : 29 பள்ளிக் குழந்தைகள் உயிரிழப்பு..: ..


இமாச்சலப்பிரதேச மாநிலம், நுர்பூர் அருகே பள்ளிப்பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பள்ளி மாணவர்கள் பலியானார்கள், பலர் காயமடைந்தனர்.

இமாச்சலப்பிரதேச மாநிலம், நுர்பூர் சட்டப்பேரவைக்கு உட்பட்டது கங்கரா மாவட்டமாகும். இங்குள்ள மக்வால் நகர் அருகே வாசிர் ராம் சிங் பதானியா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் பேருந்து இன்று மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளிப் பேருந்து சாலை ஓரத்தில் இருந்த 100 அடிபள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குறைந்தபட்சம் 29 குழந்தைகள் பலியாகினர். பலியான குழந்தைகள் அனைவரும் 10 வயதுக்குள் உள்ளவர்கள், அனைவரும் 5-ம் வகுப்புவரை படித்து வந்தவர்கள் என்பதால், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இமாச்சலப் பிரதேச கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் கூறுகையில், விபத்தில் 29 மாணவர்கள் பலியாகினர். 29 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து நுர்பூர் மாவட்ட மருத்துவர் அபித் ஹூசைன் கூறுகையில், ”பேருந்தில் இருந்து இதுவரை 29 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சுகிறோம். பேருந்தில் எத்தனை மாணவர்கள் வரை பயணித்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. காயமடைந்த மாணவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க குழந்தைகள் மருத்துவர்கள், எலும்புமுறிவு, இஎன்டி சிறப்பு மருத்துவர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட மருத்துவர் குழு தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி சந்தோஷ் பாட்டியால் கூறுகையில், ”இந்த பேருந்து பள்ளிக்கு சொந்தமானது. இதில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்து இருக்கலாம் என கருதுகிறோம். இன்னும் உறுதி செய்யப்படவில்லை. முதலில் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி இருக்கும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதில்தான் முன்னுரிமை தரப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பலியான குழந்தைகளின் குடும்பத்தாருக்கு இழப்பீடு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று இமாச்சலப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.