இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1100ஆவது இணைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களில் இருக்கக்கூடிய இணைகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத் துறைஉயில் பதிவு செய்து பின்னர் அந்த பதிவுகளை ஆய்வு செய்து தகுதியான இணைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் 2022-2023ம் ஆண்டு அறநிலையத்துறை சார்பில் 500 இணைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டது. 2023-2024ம் நிதியாண்டில் 600 இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு இணையர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
சமீபத்தில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் சேர்த்து மொத்தம் 1100 இணையர்களின் திருமண நிகழ்வை நிறைவு செய்யும் விதமாக கடைசியாக 2 இணையர்களுக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார்.
சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.