முக்கிய செய்திகள்

உலக லீக் ஹாக்கி தொடர்: அரையிறுதிற்கு இந்திய அணி தகுதி..


உலக லீக் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. பரபரப்பான காலிறுதியில், வலிமையான பெல்ஜியத்தை, ‘சடன் டெத்’ முறையில் வீழ்த்தியது.

இந்தியாவில், உலக ஹாக்கி லீக் பைனல் தொடர் நடக்கிறது. இதில் ‘பி’ பிரிவில் கடைசி இடம் பிடித்த இந்தியா (1 ‘டிரா’, 2 தோல்வி), ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெற்ற பெல்ஜியத்தை ( 3 வெற்றி) காலிறுதியில் சந்தித்தது. இந்தியாவின் குர்ஜந்த் சிங் (31வது நிமிடம்), ஒரு கோல் அடித்தார். அடுத்த 3வது நிமிடத்தில் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில், ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க, இந்திய அணி 2-0 என, முன்னிலை பெற்றது.

இதன் பின் திடீரென எழுச்சி பெற்றது பெல்ஜியம். ஒலிம்பிக்கில் (2016) வெள்ளி வென்ற இந்த அணிக்கு, 39, 46 வது நிமிடங்களில் ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில், லாய்க் இரண்டு கோல் அடித்து கைகொடுத்தார். பின், இந்தியாவின் ருபிந்தர் சிங் (46 வது), ‘பெனால்டி கார்னரில்’ ஒரு கோல் அடித்தார். பதிலுக்கு செட்ரிக் (53வது) ஒரு கோல் அடிக்க, ஆட்ட முடிவில், போட்டி 3-3 என, சமன் ஆனது.

வெற்றியாளரை முடிவு செய்ய, போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இதில் இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்படும். முதல் வாய்ப்பை இரு அணியினரும் வீணடித்தனர். 2, 3 வது வாய்ப்பை பெல்ஜியம் வீரர்கள் நழுவ விட்டனர். இந்தியா சார்பில் லலித் உபாத்யாய், ருபிந்தர் கோல் அடிக்க, இந்தியா 2-0 என, முன்னிலை பெற்றது. 4, 5 வது வாய்ப்பில் பெல்ஜியத்தின் ஆர்தர், புளோரன்ட் கோல் அடிக்க, இந்திய வீரர்கள் வீணாக்கினார். இதனால், ஸ்கோர் மீண்டும் 2-2 என சமன் ஆக, போட்டி ‘சடன் டெத்’ முறைக்கு சென்றது.

இதில் இரு அணிக்கும் தலா 1 வாய்ப்பு என, அடுத்தடுத்து தரப்படும். இந்திய தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். பெல்ஜியம் வீரர் ஆர்தர் அடித்த பந்தை இந்திய கோல் கீப்பர் ஆகாஷ் சிக்தே அசத்தலாக தடுக்க, இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, உலக ஹாக்கி லீக் பைனல் தொடரின் அரையிறுதிக்கு, இந்திய அணி இரண்டாவது முறையாக (2014-15, 2016-17) முன்னேறியது.