முக்கிய செய்திகள்

ஏமனில் பத்திரிகையாளர்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்த ஹவுதி படையினர்!

ஏமனில் உள்ள ஏமன் அல் யும் தொலைக்காட்சி (Yemen Al Youm TV) அலுவலகத்தைக் கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சிப்படையினர், அங்குள்ள செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்துள்ளனர்.

ஏமனில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹவுதிப் படையினருடன், முன்னாள் அதிபர் அப்துல்லா சலேஹ் கூட்டணியாக செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஹவுதி படையினர் மீது சவுதி மற்றும் ஐக்கிய அமீரக கூட்டுப்படையினர் கடுமையான தாக்குதலை நடத்தி வந்தனர். தற்போதைய அதிபர் மன்சூர் ஹாதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். தலைநகர் சானாவை  ஹவதி படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்நிலையில், கூட்டாளியாக செயல்பட்டு வந்த முன்னாள் அதிபர் அப்துல்லா சலேஹூக்கும், ஹவுதி படையினருக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 234 பேர் கொல்லப்பட்டதாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், முன்னாள் அதிபர் சாலேஹின் மாளிகையை இரண்டு நாட்களுக்கு முன்னர் தரை மட்டமாக்கிய  ஹவுதி படையினர், அவரது வாகனத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில், முன்னாள் அதிபர் சாலேஹ் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

 இதையடுத்து, சாலேஹின் ஆதரவாளர்களுக்கும், ஹவுதி படையினருக்கும் சண்டை தீவிரமானது. இந்தச் சூழலில்தான் முன்னாள்  அதிபர் சாலேஹூவுக்கு ஆதரவான அல்யும் தொலைக்காட்சி  அலுவலக்தை ஹவுதி படையினர் கைப்பற்றி உள்ளனர். தங்களுக்கு ஆதரவான சய்திகளை ஒளிபரப்புமாறு செய்தியாளர்களையும், ஊழியர்களையும் வற்புறுத்தியதாகவும், இதற்கு மறுத்ததால் அவர்களைப் பணயக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  13 பத்திரிகையாளர்கள் உட்பட 41 ஊழியர்கள் பணயக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு ரிபோர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders – RSF) என்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அல்யும் தொலைக்காட்சியின் மத்திய கிழக்கு அலுவலகத்தின் ஆசிரியர் குழுவும் ஹவுதிக் கிளர்ச்சியாளர்களின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளது. இந்த தாக்குதல் மற்றும் சிறைப்பிடிப்பில், ஹவுதி படையினருடன், அல்கய்தா படையினரின் பின்னணியும் இருப்பதாக கூறப்படுகிறது.

Houthi rebels in Yemen have held dozens of journalists captive for days at a television station in Sana