மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர், தமது வாழ்நாளில் மொத்தம் எழுதிய பக்கங்கள் எத்தனை, எத்தனை புத்தகங்கள் போன்ற விவரங்களை அவரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:
எழுதியிருக்கிறேன்,பேசியிருக்கிறேன், என்றால் சும்மாவா? என்னுடைய சுய சரிதையும், அதோடு இணைந்த கழகத்தின் வரலாற்றையும் “நெஞ்சுக்கு நீதி” என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதியிருக்கிறேன்.
இதுவரை ஐந்து பாகங்கள் நூல்களாக “நெஞ்சுக்கு நீதி” வெளிவந்து விட்டது. ஆறாவது பாகமும் “முரசொலி”யில் வாரந்தோறும் தொடராக எழுதிவிட்டேன். இன்னும் அது நூலாக வெளிவரவில்லை, இந்த ஆறு பாகத்தில் 1924 ஆம் ஆண்டு நான் பிறந்தது முதல் 2002ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிகழ்வுகளைத் தான் எழுதியிருக்கிறேன். இந்த ஆறு பாகங்களுக்கு மட்டும் எத்தனை பக்கங்கள் தெரியுமா ? 4616 பக்கங்கள். ஆம், இந்த ஒரு நூல் மட்டுமே 6 பாகங்கள், 4616 பக்கங்கள்.
அதுப்போலவே தமிழக சட்டப்பேரவையில் நான் ஆற்றிய முக்கிய உரைகள் இதுவரை 12 பாகங்கள் வெளிவந்துள்ளன. அது எத்தனை பக்கங்கள் தெரியுமா ? 6077 பக்கங்கள். இதுத் தவிர நான் எழுதிய கவிதைகளை எல்லாம் தொகுத்து “கவிதை மழை” என்ற தலைப்பில் 1107 பக்கங்கள் தற்போது வெளியிடப்பட்ட “சிறுகதைப் பூங்கா” 670 பக்கங்கள்! ரோமாபுரிப் பாண்டியன், சரித்திர நாவல், 705 பக்கங்கள்! தென் பாண்டிச் சிங்கம் 453 பக்கங்கள்! முத்துக் குளியல் இரண்டு பாகங்களும் சேர்ந்து 1062 பக்கங்கள்! புதையல் 380 பக்கங்கள்! சங்கத் தமிழ் 484 பக்கங்கள்! பொன்னர் சங்கர் 543 பக்கங்கள்! குரளோவியம் 648 பக்கங்கள்! குரள் உரை 285 பக்கங்கள்! தொல்காப்பிய பூங்கா (இதுவரை 14 பதிப்புகள் வெளிவந்துள்ளன) 551 பக்கங்கள்! நான் பேசி,எழுதி அச்சில் மட்டும் வந்திருப்பது மொத்தம் எத்தனை பக்கங்கள் தெரியுமா ? 17082 பக்கங்கள்! எனக்கே மலைப் பாகவும் பிரம்மிப்பாகவும் இருக்கிறது – இத்தனை பக்கங்களை எழுதியிருக்கிறோமா என்று! இது மட்டுமல்ல; சிறு சிறு நூல்கள் வடிவில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நான் எழுதியவை வெளிவந்திருக்கின்றன. இதுத் தவிர நான் “முரசொலி”யில் நான் எழுதிய கடிதங்கள் 12 பாகங்கள் வெளிவந்துள்ளன. கல்வி நிலையங்களில் நான் ஆற்றிய உரைகளைக் தொகுத்து தம்பி இள.புகழேந்தி ஒரு பெரிய நூலக வெளியிட்டுள்ளார்.
எழுதியது மாத்திரமல்ல; என்னுடைய இந்த 90 வயதில் தமிழகத்திலே உள்ள பெரு நகரங்களில், சிறு நகரங்களில், கிராமங்களில் நான் பேசாத இடம் எதுவுமே கிடையாது. வெளியூர்களிலும், நான் வெளியூர் செல்லும்போது சாலையோரங்களிலும், சென்னையிலும், மாநாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும், ஏன் என்னுடைய இல்ல
வாயிலிலும் என்று நான் நடத்தி வைத்த திருமணங்கள் மட்டும் சுமார் 20 ஆயிரத்தைத் தொடும்!