ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மக்களின் கருத்துக்கள் அவசியம் இல்லை என்பதா? : கனிமொழி எம்.பி. கண்டனம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (ஜன.20) செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு வலுவாக இருந்து வருகிறது.

தொடர்ந்து அனைத்து எதிர்கட்சிகளும் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடமும்,
விவசாயிகளிடமும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்களின் கருத்துக்களைக் கூட கேட்க வேண்டிய அவசியம் இல்லை, சுற்றுச்சூழலைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்ற ஒரு முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.

விவசாயிகளை, விவசாயத்தை அழித்துவிடக் கூடிய திட்டங்களை ஏன் தொடர்ந்து கொண்டு வருகிறார்கள் என்பது புரியவில்லை.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கையாகத் தான் பார்க்க முடியும்” என்றார்.

விவேகானந்தர் மீதுள்ள அக்கறை வள்ளுவர் மேல் இல்லையே..

அதிமுக ஆட்சியில் திருவள்ளுவர் சிலையைப் பராமரிக்கக் கூடாது என்பதையை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை, கண்டன கூட்டம் நடத்தி தான் திருவள்ளுவர் சிலையை பராமரிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. விவேகானந்தர் மீது இருக்கக் கூடிய அக்கறையை திருவள்ளுவர் மீது இவர்கள் காட்டவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

மத்திய அரசு நாட்டையே தனியார் மயமாக்கும் சூழ்நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. தனியார்மயம் தான் எல்லாவற்றுக்கும் தீர்வு என நினைத்துப் பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக தனியார் மயமாக்கி வருகிறார்கள்.

ரயில்வே என்பது பல லட்சம் பேர் வேலை செய்யக்கூடிய ஒரு துறை. இதையும் தனியார் மயமாக்கி அவர்களது வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையை உருவாக்க நினைக்கிறார்கள் என்றார் அவர்.