ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா : தமிழக அளவில் 3-ம் இடம் ,,

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் வசிக்கும் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மகள் பிரியங்கா, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடத்தையும், அகில இந்திய அளவில் 68-வது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
சிவப்பிரகாசத்தின் மனைவி ஏ.பரிமளா ஆனத்தூர் அஞ்சல் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்துவரும் நிலையில், அவரது இளைய மகன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார்.

சிறுவயது முதலே பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற பிரியங்கா, அண்ணா பொறியியல் கல்லூரியில் பயோ- மருத்துவப் பொறியியல் முடித்து, கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை எதிர்கொள்ளும் விதமாக சென்னையில் உள்ள பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். முதல் தேர்வில் வெற்றி இலக்கை அடைய முடியாமல் போனாலும், தொடர்ந்து 2-வது முறையாக தேர்வை எதிர்கொண்டு மாநில அளவில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் பேசியபோது, “கண்டிப்பாக எனக்கு இந்திய ஆட்சிப் பணி கிடைக்கும். பணி கிடைத்ததும், விளிம்பு நிலையில் உள்ளவர்களின் வாழ்க்கை மேம்படவும், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்திடவும், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களிடம் இருக்கும் திறனை அறிந்து, திறன் மேம்பாடு மூலம் அவர்களுக்கு உதவி செய்வேன்” என்றார்.