உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் சார்பில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரியங்கா காந்தி, பாஜகவுக்கு சாதகமாக நடந்து கொள்வதை விட உயிரை விடுவது மேல் என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில், அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் அங்கு தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், பாஜகவுக்கு உதவும் வகையில் காங்கிரஸ் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாக மாயாவதியும், அகிலேஷூம் விமர்சித்திருந்தனர். மேலும், பாஜகவையும், காங்கிரசையும் தாங்கள் சமதூரத்தில் வைத்தே பார்த்து வருவதாகவும் அவர்கள் இருவருமே கூறியுள்ளனர்.
ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்திக்கு வாக்குச் சேகரிக்க வந்திருந்த பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு, ” உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் தன் சொந்த பலத்தை நம்பி நிற்கிறது. வலிமையான வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். அவர்கள் பாஜகவுக்கு கடும் போட்டியாக களத்தில் நிற்கிறார்கள். பாஜகவுக்கு உதவும் வகையில் பலவீனமான வேட்பாளர்களை காங்கிரஸ் நிறுத்தி இருப்பதாக கூறுவதை நான் மறுக்கிறேன். அத்துடன், பாஜகவுக்கு உதவுவதை விட உயிரைவிடுவது மேல் என கருதுபவள் நான். இது இந்த நாட்டின் ஆன்மாவுக்காக நடக்கும் யுத்தம் இது. எங்கள் குடும்பம் உயிரைக் கொடுத்ததும், வாழ்ந்து வருவதும் இந்தக் கொள்கைகளுக்காகத்தான். அந்தக் கொள்கையின் அழிவுக்கு நான் ஒருபோதும் வழிவகுக்க மாட்டேன்” என பிரியங்கா உணர்ச்சிபூர்வமாக பதிலளித்துள்ளார்.
#WATCH Priyanka Gandhi Vadra says," I've not said I am putting weak candidates. I've said very clearly Congress is fighting this election on its own strength. I'd rather die than benefit BJP. We have chosen candidates that are either fighting very strongly or cutting BJP votes." pic.twitter.com/UqfjfNKpxI
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 2, 2019
இதனிடையே, பிரியங்காவைப் பார்த்து சூழந்த பள்ளிக் குழந்தைகள் சிலர், பிரதமர் மோடி திருடன் என முழக்கமிடத் தொடங்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியங்கா, அவ்வாறு கூறக் கூடாது என குழந்தைகளைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர்கள் ராகுல் வாழ்க என முழக்கமிட்டனர். இதைக் கேட்டு சிரித்தபடியே அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிச் சென்றார் பிரியங்கா.
ஆனால், மோடியை திருடன் என்று குழந்தைகளை வைத்து திட்டமிட்டு பிரியங்கா முழக்கமிடச் செய்ததாக பாஜகவைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். பண்பாடு மிக்க குடும்பத்தினர் குழந்தைகளை பிரியங்காவின் அருகே செல்ல அனுமதிக்காதீர்கள் என்றும் ஸ்மிருதி இரானி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரியங்கா, பிரதமர் மோடியை அவதிக்கும் வகையில் முழக்கமிடக் கூடாது என குழந்தைகளைத் தாம் தடுத்ததாகவும், அந்தக் காட்சியை திட்டமிட்டே அகற்றி விட்டு பாஜகவினர் உண்மைக்கு மாறாக சம்பவத்தை திரித்து பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.