சர்வதேச திரைப்பட விழா : ஸ்மிருதி அருகே நின்ற பத்மாவதி பட நாயகன் சாஹித் கபூர்!

பத்மாவதி பட சர்ச்சை நாடு முழுவதும் பரபரத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதில் முக்கியப் பாத்திரம் ஒன்றில் நடித்துள்ள சாஹித் கபூர், கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட தொடக்க விழா நிகழ்வில், மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு அருகே நின்று போஸ் கொடுத்துள்ளார். இதன் மூலம், பத்மாவதி பட விவகாரத்தில் பாகஜவினருக்கு முக்கிய சமிக்ஞை ஒன்றை வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, பத்மாவதி படநாயகியின் தலையை வெட்டினால் பணம், மூக்கை வெட்டினால் வெகுமானம், உயிருடன் கொளுத்தினால் அதைவிட அதிக பணம் என அண்மையில், பாஜகவிலும், இந்துத்துவ அமைப்புகளிலும் உள்ள ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த பலரும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.  அவர்களது அத்தகைய போக்கை மத்திய அரசு விரும்பவில்லை என்பதை உணர்த்துவதற்காகவே கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் அதில் நடித்த சாஹித் கபூரை தமது அருகில் நிற்க வைத்து ஸ்மிருதி இரானி போஸ் கொடுக்க வைத்ததாக பாலிவுட் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

பத்மாவதி திரைப்பட விவகாரம் மட்டுமின்றி, மற்றுமொரு சர்ச்சைக்கு இடையேயும் இந்தத் திரைப்பட விழா தொடங்கி உள்ளது.

இந்த விழாவில் திரையிடப்படுவதற்கான இந்திய திரைப்படங்கள், மற்றும் விருதுக்குரிய திரைப்படங்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடுவர் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘எஸ். துர்கா’ என்ற மலையாளப் படம் மற்றும் ‘நியூட்’ (நிர்வாணம்) என்ற மராத்தி மொழிப் படம் ஆகிவற்றை நீக்கம் செய்து திரையிடப்படும் இந்திய படங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இது தேர்வுக்குழு தலைவர் மற்றும் நடுவர்களில் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரபல பாலிவுட் இயக்குநர் சுஜோய் கோஷ் அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து தேர்வுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிரபல தேசிய விருது பெற்ற இந்திப் பட இயக்குனரும் திரைக்கதை ஆசிரியருமான அபுர்வா அஸ்ரானி தெரிவித்தார்.

இத்தனை சர்ச்சைகளுக்கு இடையே, திங்கள் கிழமை (20.11.17) 48 ஆவது சர்வதேச திரைப்பட விழாவை பாலிவுட் நடிகர் ஷாருகான் தொடங்கி வைத்தார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கோவா முதலமைச்சர் மனோகர் பரிக்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இந்தியன் பனோரமா என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற இந்த சர்வதேச திரைப்பட விழா வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 82 நாடுகளைச் சேர்ந்த 195 படங்கள் திரையிடப்படுகின்றன. ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் பியான்ட் தி க்ளவுட்ஸ் (Beyond the Clouds), ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள், இயக்குநர் கே.விஸ்வநாத்தின் திரைப்படங்கள் போன்றவை சிறப்புத் திரைப்படங்களாக திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான திரையுலக ஆளுமையாக அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட உள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் பலரும் இதில் பங்கேற்கின்றனர். டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமும் இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவி தமது கணவர் போனி கபூர், மகள் ஜான்வி ஆகியோருடன் தொடக்க விழாவுக்கு வருகை தந்திருந்தார்.

IFFI2017 opening ceremony