முக்கிய செய்திகள்

’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கு…

‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி நடத்த தடை கோரிய மனு குறித்து தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘இளையராஜா 75′ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

பிப்ரவரி 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் இந்த விழா நடைபெறவுள்ள நிலையில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்று வரும் பல முறைகேடுகளை தடுக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நிர்வாகியாக நியமித்து

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் ஜெ. சதீஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், கடந்த 2017-ம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் தொடர்ந்து தன்னிச்சையாகவே செயல்பட்டு வருவதாகவும்,

அவர் பதவி ஏற்கும்போது ரூ.7 கோடியாக இருந்த வங்கியின் கையிருப்பு தற்போது ரூ.50 லட்சமாக குறைந்துள்ளதாகவும்,

சங்கத்தின் பணத்தை தன்னுடைய வாக்கு வங்கிக்காக விஷால் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் மாதம் நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் ஒப்புதல் இல்லாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷாலின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் பிப் 25-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை நிர்வாகியாக நியமித்து தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘இளையாராஜா 75’ இசை நிகழ்ச்சி நடத்த ரூ. 7 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் எனக்கூறி சங்கத்தின் பணம் ரூ.1 கோடி செலவிடப்பட்டுள்ளது.

எனவே, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர் சங்க வங்கிக் கணக்கில் 7 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.

பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் ‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.