வெளிநாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவலைத் தடுக்க 7000 கோடியில் சுவர் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரகடனம்..

அமெரிக்காவுக்கு வெளிநாட்டினர் ஊடுருவி சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதற்காக மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் ஒன்று கட்டி பாதுகாப்பை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் டிரம்பின் இந்த செயலுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களுடன் ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களும் சேர்ந்து கொண்டதால் அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் அரசு பணிகள் முடங்கின.

எனவே ரூ.7 ஆயிரம் கோடி செலவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்தார்.

அதை தொடர்ந்து மெக்சிகோ எல்லையில் 92 கி.மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரத்துக்கு சுவர் கட்டவும், அங்கு ரோடு மற்றும் மின் வசதி செய்யும்படி ராணுவ தலைமையகமான பென்டகனிடம் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கோரிக்கை விடுத்து இருந்தது.

அதை பென்டகன் செயல் தலைவர் பாட்ரிக் ‌ஷனாகன் ஏற்றுக் கொண்டார். மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க ராணுவ துறையின் என்ஜினீயர்களுக்கு அதிகாரம் அளித்து உத்தரவிட்டார்.

அதன்படி அவர்கள் திட்டம் தயாரிப்பது, அதை செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.