திருமணத்தை மீறிய தவறான உறவு குறித்த இந்திய தண்டனைச் சட்டம், தூசியடைந்த விக்டோரியா கால வழக்கத்தின்படி திருமணமான பெண் கணவனுக்கு அடிபணிந்தவள் என்ற பழைய கொள்கையைக் கொண்டதாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருமணத்தை மீறிய உறவு குற்றம் என்பதை நீக்கக்கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
“அனைத்து விதங்களிலும் பெண் என்பவர் ஆணுக்கு சமம் என்பதை சமூகம் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது” என்று 5 பக்க எழுத்து வடிவ உத்தரவில் உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.
இந்தியத் தண்டனைச் சட்டம் 497-ம் பிரிவு, திருமணத்தை மீறிய பாலியல் உறவு பலாத்காரம் என்று கூற முடியாது, ஆனால் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளது. குறிப்பாக எந்தப் பெண்ணுடன் ஒரு ஆண் திருமணத்துக்கு அப்பாற்பட்டு பாலியல் உறவு மேற்கொள்கிறாரோ அந்தப் பெண் இன்னொருவர் மனைவி என்று தெரியும் பட்சத்தில் அவளது கணவரின் ஒப்புதல் இல்லாமல் உறவு மேற்கொள்ளப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று 497-ம் பிரிவு கூறியுள்ளது.
இந்தத் தண்டனைச் சட்டத்தின் 2 அம்சங்களை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளது. ஒன்று, இந்தச் சட்டம் ஏன் திருமணமான பெண்ணை பாதிக்கப்பட்டவராகச் சித்தரிக்கிறது.
இரண்டாவது, குறிப்பிட்ட பெண்ணின் கணவரின் சம்மதத்துடன் வேறொரு உறவு பரிணமிக்கிறது எனும் போது அந்தக் கணத்திலேயே அது தவறான உறவாகாது. ஆகவே திருமணமான ஒரு பெண் அவர் கணவரின் ‘சொத்து’அல்லது தனக்கென்று சிந்தனையற்ற, செயல்திறனற்ற ஜடப்பொருளா? என்ற இரண்டு கோணங்களில் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யவுள்ளது.
“இந்தியத் தண்டனைச் சட்டம் 497-ம் பிரிவு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திர அடையாளத்தை அடித்து நொறுக்கிவிட்டது. அதாவது கணவனின் சம்மதத்துடன் என்று கூறும்போதே பெண்ணின் தனிப்ப்ட்ட சுதந்திர அடையாளத்திற்கு அடி கொடுத்துள்ளது. இது பெண்ணை அடிமையாக்குவதற்குச் சமமே. மாறாக நம் அரசியல் சாசனச் சட்டம் பெண்களுக்கு சம உரிமை வழங்குகிறது” என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகப் பதிவிட்டுள்ளது.
அதே போல் ஒரு பெண் யார் பொறுப்பில் இருக்கிறாரோ அவர்தான் தவறான உறவு பற்றிய புகார் அளிக்க முடியும், இதனையடுத்து குற்ற நடைமுறைச் சட்டப் பிரிவு 198 (1), மற்ற்ம் (2) ஆகியவையின்படி திருமணம், கள்ள உறவு ஆகியவற்றில், பாதிக்கப்பட்ட கணவன் மட்டுமே புகார் அளிக்க முடியும் என்பதை இந்த மனு கேள்விக்குட்படுத்தியுள்ளது.
மனுதாரர் ஜோசப் ஷைன் என்பவர் சார்பாக வாதாடிய காலீஸ்வரம் ராஜ் மற்றும் எம்.எஸ்.சுவிதத் ஆகியோர் கூறும்போது இந்தத் தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் பெண்கள் ஆண்களின் சொத்து என்பதாகவே பார்க்கப்பட்ட காலக்கட்டமாகும் எனவே 497-ம் சட்டப்பிரிவை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து, அரசியல் சட்டம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் அனைத்து விதத்திலும் சம உரிமை உண்டு என்று கூறுகிறது. எனவே பெண் எனப்படுபவர் ஆணுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் சமமாக நடத்தப்படுவதை சமூகம் உணர வேண்டிய நேரம் வந்து விட்டது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன் உத்தரவில் பதிவிட்டுள்ளார்.
நீதிபதி சந்திராசூட், தண்டனைச் சட்டம் 497-ம் பிரிவு ஏன் கணவனின் வார்த்தையை நம்ப வேண்டும்? அதாவது கணவனின் சம்மதத்துடன் பெண் தன் கணவனல்லாத இன்னொரு ஆணிடம் உறவு கொள்ள வேண்டும் என்பது ஆண்கள் பக்கம் சாய்வதாக உள்ளது என்று குற்றம்சாட்டினார். அதாவது சட்டப்பிரிவு 497 மனைவியை கணவனின் சொத்து, பொருள், என்பதாகப் பார்க்கிறதா என்பதைச் சுற்றி விவாதம் நடைபெற்றது.
இந்தச் சட்டப்பிரிவு தூசி படிந்த விக்டோரியா கால நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது என்று வர்ணித்த தலைமை நீதிபதி சமூகம் முன்னேறும்போது புதிய தலைமுறை சிந்தனைகளும் எழுச்சி பெறுகின்றன என்றார்.
இதற்கு முன்னதாக கள்ள உறவுகள் குறித்த இந்தியத் தண்டனைச் சட்டம் 497-ம் பிரிவின் செல்லுபடித்தன்மையை 1954, 1985 மற்றும் 1988-ம் ஆண்டுகளில் அங்கீகரித்தது குறிப்பிடத்தக்கது.