நானும்…: ரவிசுப்பிரமணியன் (கவிதை)

 

நிலைகுலைய வைத்ததை உணர்ந்ததுமே
சிதைந்து குமுறும்படி நேர்ந்துவிட்டது

நள்ளிரவில் விழுந்த எரிகல்லாய் 
என் மேல் அது விழ 
உடைந்து சிதறினேன்

திகிலின் கத்தி
உயிர் செருக திக்பிரமை

எப்போது நினைத்தாலும் 
கோட்டானாய் அலறி
வானம் அதிரும்

ஆயிரம் கால்கள் கொண்ட 
கம்பளிப்பூச்சாய் ஊரும்

அகக்காம்பெங்கும் 
பால்கட்டித்தெறிக்கும் வலிகள்

வனாந்திரத்தனிமையில்
விபத்துக்குள்ளானவள் போல்
சீர்குலைந்த கணங்களில் துடித்துத் திமிறியதை
உதறி உதறி அழுதது ஞாபகம்

மகிழ்வின் தருணங்களிலும்
பீதியாய் மோதி எதிரொலிக்கும்

துர்கனவின் திடுக்கிடல் 
நிழலாய் தொடர்ந்தது

என் தோல்வி ஏதுமில்லையென்றபோதும்
அப்படி உணர்ந்தபடியேயிருந்திருக்கிறேன்

விதியின் பெயரால்
ரகசியம் காத்துநின்றேன்

எனக்கான சமிக்ஞை மின்மினியின் ஒளிதெரியும்
கணம் விடிய இவ்வளவு காலமாயிற்று

கட்டுண்ட நதி திமிறிப் பாய்கிறது

உறக்கமற்ற இரவுகளில் தளும்பிய துக்கம்
இன்றேனும் வடிந்தது

உள்ளுக்குள் சதா கேட்ட நிராதரவின் குரலுக்கு
விடுதலை தந்து சற்றேனும் மனச்சமன்கொண்டேன்

ஆனாலும் நீள்கிறது கேள்விகள்
இப்போது ஏன் சொல்கிறேனென்று.

I’m also…: Ravisubramaniyan’s poem

சபரிமலையில் கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயற்சி : பினராயி விஜயன் குற்றச்சாட்டு..

சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு…

Recent Posts