நாட்டின் பொருளாதாரத்தையே வழிநடத்திச் செல்லக் கூடிய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என ஐஎம்எப்எல் எனப்படும் (International Monetary Fund – IMFL) சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் கெர்ரி ரைஸிடம், இந்தியாவில் நிதியமைச்சகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:
இந்தியாவில் ரிசர்வ் வங்கி தொடர்பாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வருகிறோம். உலகில் எந்த நாடாக இருந்தாலும், அந்தந்த நாடுகளுக்கான மத்திய வங்கிகளின் சுதந்திரத்தில் அரசுகள் தலையிடுவது சரியான போக்கல்ல. ( இந்தியாவில் ரிசர்வ் வங்கி) மத்திய வங்கிகளின் சுதந்திரத்தில் அரசுகளோ மற்ற அமைப்புகளோ தலையிடாமல் இருப்பதுதான் உலக அளவில் சிறந்த நடைமுறையாக இருந்து வருகிறது.
இவ்வாறு ஐஎம்எஃப்எல் அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குநர் கெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு, சர்வதேச நிதி அமைப்புகளின் கவனத்திற்குரியதாக மாறியிருப்பது, இதுதொடர்பான சர்ச்சையை அதிகரித்துள்ளது.