முக்கிய செய்திகள்

அமமுக மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார்

அமமுக விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன் அதிமுகவில் இணைந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் அணியில் இணைந்தார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் சாத்தூர் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்தது.

அதையடுத்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நேரில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அப்போது விருதுநகர் மாவட்டச் செயலாளரும் பால்வளத் துறை அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா, சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோரும் உடனிருந்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளது விருதுநகர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.