இந்திய-சீன பாதுகாப்பு அமைச்சர்கள் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நேரில் சந்திப்பு…

இந்திய-சீன பாதுகாப்பு அமைச்சர்கள்

கிழக்கு லடாக்கில் தற்போது உருவாகியுள்ள பதட்டமான நிலைமையையொட்டி இந்தியா-சீனா நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நேற்று சந்தித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து கால்வான் மற்றும் கிழக்கு லடாக் பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலைமை நிலவி வருகின்றது.

இந்நிலையில் நேற்று இரவு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்தியா-சீனா நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதில் சீன தரப்பிலிருந்து அதன் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் ஃபெங்கி, மற்றும் இந்திய தரப்பிலிருந்து ராஜ்நாத் சிங் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டனர். சீன தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்ததன் அடிப்படையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.

இதில், “உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடானா இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகள் அமைதி நிலையான பாதுகாப்புடனும், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றோடு ஆக்கிரமிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். சர்வதேச விதிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும்.” என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையொட்டி அது குறித்து பேசுவதற்காக இரு நாட்டு அமைச்சர்களும் சந்திப்பது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.