இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 60,963 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 23,29,638 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 834 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 46,091 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை கரோனா பாதிப்படைந்தவர்களில் 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, குணமடைபவர்களின் விகிதமானது 70.37 சதவீதமாக உள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில், அமெரிக்காவை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் தான் நாட்டில் அதிகமாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் இதுவரை 5,35,601 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 18,306 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் கொரோனா நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மகாரஷ்டிராவை தொடர்ந்து, கரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் அதிகம் உள்ளது. இங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,08,649ஆக உள்ளது. ஒரே நாளில் 5,834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீப நாட்களாக கர்நாடகாவில் கரோனா பாதிப்பு அதிரித்து வருகிறது. 1.88 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,398 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 80,000 பேர் கரோனாவுக்கு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிக அளவிலான மக்களுக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டதாக நாட்டில் கோவா முதலிடத்தில் உள்ளது என மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தெரிவித்தார். இதுவரை அம்மாநிலத்தில் 9,444 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.
கரோனா வைரஸ் நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று 10 மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, இந்த 10 மாநிலங்களில் கரோனா வைரஸை தோற்கடித்தால், தேசமும் வெல்லும் என்ற கருத்து உருவாகியுள்ளது” என்று பிரதமர் கூறினார்.
“பீகார், குஜராத், உ.பி., மேற்கு வங்கம், மற்றும் தெலுங்கானா ஆகிய நாடுகளில் சோதனைகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதும் இந்த விவாதத்திலிருந்து வெளிப்பட்டுள்ளது.”