இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் 56 வது நாளில் பாலிவுட் நடிகை, தயாரிப்பாளர் பூஜா பட் புதன்கிழமை பங்கேற்று சிறிது தூரம் நடந்து சென்றார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது தெலங்கானாவில் நடைபெற்றுவரும் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 56 வது நாளான இன்று (நவ.2 ஆம் தேதி) புதன்கிழமை ஹைதராபாத்தில் நடந்த யாத்திரையில் பாலிவுட் நடிகை பூஜா பட் கலந்து கொண்டார். அவர் ராகுல் காந்தியுடன் இணைந்து சிறிது தூரம் நடந்து சென்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ, படங்களை வெளியிட்டு, “ஒவ்வொரு நாளும் புதிய வரலாறு உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தினமும் இந்திய ஒற்றுமை யாத்திரை மீதான நாட்டு மக்களின் அன்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
தெலாங்கனா மாநிலம் ஹைதராபாத் நகரில் காலையில் நடந்த யாத்திரையின் முன்பக்கமாக இருந்து வந்த பூஜா பட், ராகுல் காந்தியுடன் கை குலுக்கிய பின்னர் அவருடன் யாத்திரையில் இணைந்து சிறிது தூரம் நடந்து சென்றார்.
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டார்.