” ‘புதுமைப்பெண் திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்குமே முன்னோடித் திட்டமாக விளங்கப்போகிறது” என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரவால் கூறியுள்ளார்.
தமிழக அரசு சார்பில் சென்னையில் நடந்த விழாவில், 26 தகைசால் மற்றும் 15 மாதிரி பள்ளிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரவால் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்: “தமிழகத்தில் இன்று கல்வித்துறையில் பல முன்னணி நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன. 26 தகைசால் பள்ளிகள் மற்றும் 15 மாதிரி பள்ளிகள் “புதுமைப்பெண்” என்ற முன்னோடித் திட்டம் தொடங்கப்படுகிறது. இவற்றில் புதுமைப் பெண் திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்குமே முன்னோடித் திட்டமாக விளங்கப்போகிறது. கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி வந்தார். டெல்லியில் உள்ள மாதிரிப் பள்ளிகளை பார்வையிட வேண்டும் என்று கூறினார், அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அரசியல்வாதிகளின் பெரும்பாலான நேரங்கள் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளிலேயே கழியும்போது, தமிழக முதல்வர் டெல்லியில் உள்ள பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பார்க்க வேண்டும் என்று கூறியது ஆச்சரியம் அளித்தது. அதன்படி அவரை நேரில் அழைத்துச் சென்று பள்ளி மற்றும் மருத்துவமனைகளை காண்பித்தேன்.அன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழக முதல்வர், இதே போல மாதிரிப் பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த குறைந்தது 3 அல்லது 4 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார்கள், ஆனால் தமிழகத்தில் மிக குறைந்த காலக்கட்டத்தில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. ஏற்கெனவே 10 மாதிரிப் பள்ளிகள் இருந்துவரும் நிலையில் தற்போது மேலும் 15 மாதிரிப்பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் மாநிலங்களில் இருந்தாலும், மாநில அரசுகள் பல்வேறு புதுமையான நல்ல திட்டங்களைக் கொண்டு வருகின்றன. அந்த அனுபவங்களை ஒவ்வொரு மாநில அரசுகளும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.