முக்கிய செய்திகள்

ஆஸி., தொடரை கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை

ஆஸ்திரேலிய தொடரை வென்று இந்திய அணி மகத்தான வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. பரபரப்பான 3-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகித்தது.

இந்நிலையில் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மயாங்க் 77, புஜாரா 193, ஜடேஜா 81, ரிஷப்  பன்ட் 159* ரன் விளாசினர். இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 300 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.  இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ்  5  விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.  322 ரன் பின்தங்கிய ஆஸ்திரேலியா பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாட வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது.

மழை மற்றும்  போதிய வெளிச்சம் இல்லாததால் 4-வது நாள் ஆட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 316 ரன் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலியா தவித்து வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை மழை காப்பாற்றியுள்ளது. இன்று மழையால் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முன்னிலையில் உள்ள இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சரித்திர சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி கைப்பற்றும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

31 ஆண்டுகளுக்கு பின் பாலோ ஆன் பெற்ற ஆஸி
சொந்த மண்ணில் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 31 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பாலோ ஆன் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 300 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி இந்த அவமானத்தை சந்தித்தது. முன்னதாக, 1988ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடந்த  டெஸ்டில் ஆஸி. அணி பாலோ ஆன் பெற்றிருந்தது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 172 டெஸ்ட் போட்டிகளில் பாலோ ஆன் பெறாமல் இருந்து வந்த ஆஸி., கோஹ்லி தலைமையிலான இந்திய அணியிடம் அந்த பெருமையை  பறிகொடுத்தது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ ஆன் கொடுப்பது இது 4வது முறையாகும். இதற்கு முன் 1986ல் சிட்னியில் நடந்த டெஸ்டிலும், 1979-80ல் இந்தியாவில் நடந்த தொடரில் டெல்லி மற்றும் மும்பை டெஸ்டிலும்  பாலோ ஆன் கொடுத்துள்ளது.