முக்கிய செய்திகள்

இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீளவில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

பணமதிப்பு  நீக்க அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாடு மீளவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கை துரதிர்ஷ்ட வசமானது. சரியாக சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவு. வயது, பாலினம், மதம், தொழில் என எந்தப் பாகுபாடு மின்றி நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் தனிப்பட்ட முறையில் அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பணமதிப்பிழப்பை அடுத்து நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக் குறியீடு மிக மோசமாக சரிந்தது. அதுமட்டுமின்றி, பணமதிப்பிழப்பின் ஆழமான பக்க விளைவுகள் இதுவரை கண்டறியப்படவே இல்லை. பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட அதிர்வுகளில் இருந்து நாட்டின் அடித்தளமாக விளங்கும் சிறு தொழில்கள் இப்போது வரை மீளவில்லை.

பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட வேலையில்லா நெருக்கடி தற்போதும் தொடர்கிறது. இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

நிதிச்சந்தைகளில் ஏற்பட்ட பணப்புழக்கச் சிக்கல், வங்கிகளில்லாத நிதிச் சேவை நிறுவனங்களின் கட்டமைப்பை அதிகபட்சமாக சீர்குலைத்து விட்டது.

இன்னும் கூட பணமதிப்பிழப்பின் தாக்கத்தை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை. அதனை அனுபவமாக கொண்டு பாடம் கற்கவுமில்லை.

பணமதிப்பிழப்பாலும், எரிபொருள் விலையேற்றத்தாலும் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார எதிர் விளைவுகள், தற்போது முகத்தில் அறையத் தொடங்கி இருக்கின்றன.

சாகசம் புரிவதாக கூறி ஏற்படுத்தப்பட்ட பொருளாதார விபத்தால், ஒரு நாடு எப்படி கலங்கடிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டிய நாள் இது. பொருளாதார கொள்கைகளை வகுக்கும் போது அதிக சிந்தனையுடனும், கவனத்துடனும் அதனை மேற்கொள்ள வேண்டும் என்பதை இனியேனும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார தவறுகளை சரிசெய்து பழைய நிலைக்கு மீள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

India yet to recover from demonetization shock: Manmohan