முக்கிய செய்திகள்

கடலில் மெல்ல மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தியத் தீவு..

இந்தியத் தீவு ஒன்று கடல் மட்ட உயர்வால் பெரும் பாதிப்பில் சிக்கியுள்ளது.

வங்கக் கடலின் சுந்தரவன டெல்டா பகுதியில் 1.8 சதுர மைல் பரப்பளவில் கோராமாரா என்ற தீவு அமைந்துள்ளது. இந்த இந்த டெல்டா பகுதி ஆனது, மிகவும் தாழ்வாக இருக்கக்கூடிய 54 தீவுகளால் உருவானது.

பருவநிலை மாறுபாடு காரணமாக இவற்றில் பல தீவுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. முன்னதாக சுந்தரவன தீவான லோஹாசரா, முற்றிலும் நீரில் மூழ்கிப் போனது. அங்கிருந்து மக்கள் சுற்றுச்சூழல் அகதிகளாக மாறினர்.

இதேபோல் தங்கள் தீவும் மாறிவிடுமோ என்று கோராமாரா மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அங்குள்ள முதியவர் சன்ஜிப் சாகர் கூறுகையில், சுனாமியோ அல்லது பெரிய சூறாவளியோ வந்தால் நாங்கள் முடிந்து விடுவோம் என்று அச்சம் தெரிவித்தார்.

பெரும்பாலான தீவுவாசிகள் விவசாயிகள் ஆவர். மாங்குரோவ் மரங்கள் மூலம் அறுவடை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தொடர் வெள்ளப்பெருக்கு, வீடுகளை மட்டுமல்லாமல் விவசாய உற்பத்தியையும் பாதிக்கிறது.

கோராமாரா தீவில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 7,000ல் இருந்து 4,800ஆக குறைந்துள்ளது. அங்குள்ள பெரும்பாலான மக்கள் இடம்பெயரவே விரும்புகின்றனர். ஆனால் நிலப்பகுதிக்கு மாறி, புதிய வாழ்க்கையை தொடங்க போதிய பண வசதியில்லை.

இதற்கு அரசு உதவி செய்தால் புதிய வாழ்க்கையை மாற்று இடத்தில் தொடங்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நாசா வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகம் முழுவதும் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது.

இதற்கு கிரீன்லாந்து, அண்டார்டிகா ஆகியவற்றின் பனிப்பாறைகள் உருகி வருவதே காரணம் ஆகும். தற்போதைய சூழல் தொடர்ந்தால், வரும் 2100ஆம் ஆண்டு எதிர்பார்ப்பதை விட இருமடங்கு கடல் பரப்பு அதிகரித்து விடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.