இந்திய விமானப்படையின் கமாண்டர் அபிநந்தனை இன்று பாகிஸ்தான் விடுவிக்கிறது. பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிய தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படையின் 12 மீராஜ் விமானங்கள் தாக்கி அழித்ததை தொடர்ந்து,
இந்திய ராணுவ நிலைகளை குண்டு வீசி தாக்க முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய விமானப்படையின் சுகோய், மிக் ரக போர் விமானங்கள் விரட்டியடித்தன.
இதில் ஆகாயம் மார்க்கமாக ஏவும் ஏவுகணையை சுமந்து வந்த பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை, மிக் 21 விமானத்தில் இருந்து சுட்டு வீழ்த்தினார்
அபிநந்தன் என்ற தமிழக வீரர். பாகிஸ்தான் விமானம் தாக்கியதில் அபிநந்தனின் விமானமும் சேதம் அடைந்ததால் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கிய அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப்பிடித்தனர்.
அபிநந்தனை பகடையாகப் பயன்படுத்தி இந்தியாவை பணிய வைக்க முடியாது என்று கடுமையான எச்சரிக்கை விடுத்த இந்தியா,
போர் கைதிகளை வழிநடத்துவதற்கான ஜெனிவா ஒப்பந்தத்தின் படி அபிநந்தனை மரியாதையுடன் நடத்தும்படியும் உடனடியாக தங்களிடம் ஒப்படைக்கும்படியும் வலியுறுத்தியது.
இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் தந்ததால்
பாகிஸ்தான் பணிந்தது. விரைவில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நல்ல செய்தியை எதிர்பார்ப்பதாக வியட்நாமில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான்,
நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபிநந்தன் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார். இன்று பிற்பகல் லாகூருக்கு அழைத்து வரப்படும் அபிநந்தன்,
வாகா எல்லையில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
இதனிடையே இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவதால் அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அவரை வாகா எல்லையில் வரவேற்க அபிநந்தனின் பெற்றோர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக அபிநந்தனின் வீட்டில் கூடிய உறவினர்களும் நண்பர்களும் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.