இந்துாரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு..


மத்திய பிரதேசம் இந்துாரில் 4 மாடிக்கு கட்டிடம்  இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள சார்வேட் பேருந்து நிலையத்திற்கு அருகில்  4 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் ஒரு ஹோட்டலும், லாட்ஜும் அமைந்துள்ளது.

நேற்று இரவு 10 மணிக்கு அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. இதையடுத்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ம.பி.யில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தூரில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பலியானோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.