இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..


ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ஒரு கோடி இழப்பீடு, மகன்கள் கல்விச்செலவு அரசு ஏற்பு, காயமடைந்த காவலர்கள் மருத்துவச்செலவை அரசே ஏற்பு உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று போலீஸார் மத்தியில் கோரிக்கை எழுந்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதை கோரிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு உயிரிழந்த இன்ஸ்பெக்டர் மற்றும் காயமடைந்த காவலர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளது.

இது குறித்த முதல்வர் எடப்பாடியின் அறிவிப்பு வருமாறு:

”கடந்த 16/11/17 அன்று கொளத்தூரில் நகைக்கடை ஒன்றில் நடந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சென்னராம், கேளாராம், தன்வர்ஜி மற்றும் சங்கர்லால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாதுராம் மற்றும் தினேஷ் ஆகியோர் தப்பிச்சென்றனர். அவர்களை பிடிக்க மதுரவாயல் காவல ஆய்வாளர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி முதல் நிலைக்காவலர் சுதர்சன் உள்ளிட்டோர் 8/12/17 அன்று ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றனர்.

இன்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குற்றவாளிகள் தங்கியிருந்த கூடாரத்தை சுற்றி வளைத்து அவர்களை பிடிக்க முற்பட்டபோது, குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்டதில் மதுரவாயல் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பெரிய பாண்டியன் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு துயரமடைந்தேன்.

இதி உடன் சென்ற காவலர்கள் காயமடைந்தனர் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் நல்ல முறையில் குணமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எனது விருப்பத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெரிய பாண்டியன் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளேன். அவரது மகன்கள் ரூபன் மற்றும் ராகுல் படிப்புச் செலவையும் அரசே ஏற்கும்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சைப்பெற்று வரும் ஆய்வாளர் முனிசேகர் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் சுதர்சன் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சமும், அவர்கள் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.