முக்கிய செய்திகள்

காப்பீட்டுடன் ஆதார் மற்றும் பான் எண் இணைப்பது கட்டாயம்..


பிரீமியம் கட்டினால் மட்டும் போதாது ஆதார், பான் எண் இணைக்காவிட்டால் காப்பீட்டு பலன் கண்டிப்பாக கிடைக்காது..
காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் பாலிசிதாரர்களின் காப்பீட்டுடன் ஆதார் மற்றும் பான் எண்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முறைகேடுகளை தடுக்க ஆதார் எண்ணை நிரந்தர மற்றும் ஒரே அடையாள சான்றாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்படி, மத்திய அரசு பலன்கள், வருமான வரி கணக்கு தாக்கல், வங்கி கணக்கு ஆகியவற்றுக்கு பான், ஆதார் வழங்க வேண்டும் என கூறியுள்ளது. இந்நிலையில், காப்பீடுகளுக்கும் இதை கட்டாயப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு கடந்த ஜூன் 1ம் தேதி அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பில், காப்பீடு உட்பட நிதிச் சேவைகளுக்கு பான் எண் அல்லது படிவம் 60 மற்றும் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் நிலேஷ் சதே கூறுகையில், மத்திய அரசின் சட்ட விதிமுறைகளை நிறுவனங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுளளது. சில காப்பீட்டு நிறுவனங்கள் இதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்துள்ளனர் என்றார்.
தற்போதே பல காப்பீட்டு நிறுவனங்கள் ரொக்கமாக காப்பீட்டு பலனை அளிப்பதில்லை. வங்கி கணக்கில் மட்டுமே செலுத்துகின்றன. இந்த வங்கி கணக்குகளில் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, சில காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.50,000க்கு மேல் பிரீமியம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம் பான் எண் விவரங்களை கேட்டுள்ளன. இதுகுறித்து காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஆதார் மற்றும் பான் எண்ணை பாலிசியுடன் இணைப்பது காப்பீட்டு நிறுவனங்களுக்கு நீண்டகால பலனை அளிப்பவை. அதோடு பாலிசி நோக்கங்களை அணுகுவதிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணமாக, வெளிநாடுகளில் வாகனங்களுக்கு பாலிசி எடுத்திருந்தால், பாலிசிதாரரின் கடந்த கால செயல்முறைகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. முறைகேடுகளை தடுக்க இது உதவும். அதோடு, மத்திய அரசின் டிஜிட்டல் மயமாக்கலுக்கும் வலு சேர்ப்பதாக அமையும் என்றார்.
* மொத்தம் 54 காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன.
* இவற்றில், ஆயுள் காப்பீடு சாராத 4 நிறுவனங்கள், ஒரு ஆயுள் காப்பீடு நிறுவனம், ஒரு மறு காப்பீடு நிறுவனம் அடங்கும்
* தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 23
* தனியார் பொது காப்பீட்டு நிறுவனங்கள் 18
* மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் 5
* எல்ஐசியில் மட்டும் 29 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.
* கடந்த ஆண்டில் மொத்தம் 2.67 கோடி காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 2.05 கோடி எல்ஐசி காப்பீடுகள்.
* புதிய திட்டப்படி, ஆதார் – பான் இணைக்காதவர்களின் காப்பீட்டு பலனை நிறுவனங்கள் நிறுத்திவைக்க முடியும்.