முக்கிய செய்திகள்

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு கிடுக்கிப்பிடி: ப்ளக்ஸ் வைக்க, கூட்டமாக மக்களை அழைத்துச் செல்ல நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களுக்கு கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வழக்கில் தாமாக முன்வந்து அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்துள்ள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

வாக்குக்கு பணம் பெறுவதும், கொடுப்பதும் தவறு என்பதை குறிப்பிட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் பிளக்ஸ் போர்டு, பேனர்களை வைப்பது தொடர்பாக ஏற்கனவே பல உத்தரவுகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியது. தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சியினர் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதேபோல அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக்கூட்டங்களுக்கு மக்களை அதிக அளவில் லாரி, பேருந்து, ஆட்டோ, வேன் ஆகியவற்றில் அழைத்துச் செல்வதையும் பார்க்க முடிகிறது என்று கூறிய நீதிபதிகள், அரசியல் கட்சியினர் தங்களது கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல தடை விதித்தனர். அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு பெரும் அளவில் மக்களை அழைத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்க்க தாமாக முன்வந்து உத்தரவிட்ட நீதிபதிகள், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.