சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு..


சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தலில் இந்தியா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நெதர்லாந்தின் ”தி ஹேக்” நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 15 நீதிபதிகள் உள்ளனர். ஐ.நா.வின் பொதுச் சபையில் உள்ள 193 நாடுகளும், பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளும் சுழற்சி முறையில் அவர்களைத் தேர்வுசெய்யும்.
இந்நிலையில், காலியாகும் ஒரு நீதிபதி பதவிக்கு இந்தியாவின் தல்வீர் பண்டாரியும், இங்கிலாந்தில் கிறிஸ்டோபர் கிரீன்வுட்டும் ((Christopher Greenwood )) போட்டியிட்டனர். இதையொட்டி நடைபெற்ற தேர்தலில், ஐ.நா. பொதுச்சபையில் உள்ள 193 நாடுகளில் 183 நாடுகள் இந்தியாவின் தல்வீர் பண்டாரிக்கு ஆதரவு தெரிவித்தன. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகளின் ஆதரவு அளித்திருந்தன. இதன்பேரில், தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இவர் வரும் 2026-ஆம் ஆண்டு வரை இந்தப் பதவியில் இருப்பார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த 70 வயதான தல்வீர் பண்டாரி உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். தல்வீர் பண்டாரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தேர்வுசெய்யப்பட்டதை ட்விட்டர் மூலம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.