ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன்..


ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு ப.சிதம்பரத்துக்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.

இதைத்தொடர்ந்து டெல்லி ஐகோர்ட்டில் அவர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை  விசாரித்த நீதிபதி ஏ.கே.பதக், ப.சிதம்பரத்தை கைது செய்ய அடுத்த மாதம் (ஜூலை) 3–ந்தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டார். எனினும் சி.பி.ஐ. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு ப.சிதம்பரத்துக்கு அறிவுறுத்திய நீதிபதி, அவரது முன்ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு சி.பி.ஐ.க்கும் உத்தரவிட்டார். பின்னர் இந்த மனு மீதான விசாரணை ஜூலை 3–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஜூன் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.