முக்கிய செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி..


சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவில்லை.

ஆனால், கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக அனுமதி பெற்றுத் தந்தார். இதற்காக கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் பெற்றதாக சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தின. இது தொடர்பாக ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பங்குதாரர் இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிஐ அமைப்பு தெரிவித்தது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸை சிபிஐ பிறப்பித்தது. ஆனால், அதை நீதிமன்றம் மூலம் கார்த்தி சிதம்பரம் ரத்து செய்தார்.

இந்நிலையில் நீதிமன்றம் அனுமதியுடன் தனது மகன் கல்வி நிமித்தமாக லண்டனுக்கு சென்றுவிட்டு இன்று காலை கார்த்தி சிதம்பரம் சென்னை வந்தார்.

விமான நிலையத்திலேயே அவரை மடக்கிய சிபிஐ சிறப்பு பொருளாதார பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்று ரகசியமான இடத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதன்பின் டெல்லியில் கார்த்தி சிதம்பரத்துக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, டெல்லி மாநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் சுமீத் ஆனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அதன்பின் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு சிபிஐ தரப்பில் வாதிடுகையில், கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை. ஆதலால், 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதியிடம் சிபிஐ அனுமதி கோரினர்.

ஆனால் கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இன்று காலையில் இருந்து ஏறக்குறைய 22 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆதலால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

மேலும், கார்த்தி சிதம்பரம் தனது வழக்கறிஞர்களுடன் 10 நிமிடங்கள் கலந்து பேசவும் நீதிபதி அனுமதியளித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.