கரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 13,480 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் மோடி கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தாா்.
பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இந்த நோய்த்தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றவா்களுக்கு எளிதில் பரவும் என்பதால், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, தேசிய அளவிலான ஊரடங்கை மேலும் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார் பிரதமர் மோடி. கரோனா தொற்று பரவலின் தீவிரத்தை அறிந்து, ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டி முதலில் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது.
கரோனா அச்சுறுத்தல் விலகி, பாதுகாப்பான சூழல் உருவாகும்போதுதான் ஐபிஎல் போட்டி தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள 2020 ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஒரு பேட்டியில் கூறியதாவது:
ஐபிஎல் போட்டியை ரத்து செய்வதால் பிசிசிஐக்கும் அதன் அணிகளுக்கும் 500 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும்.
இன்னொரு நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்துவதன் மூலம் இந்த நஷ்டத்தை ஓரளவு குறைக்க முடியும். இலங்கையில் ஐபிஎல் போட்டி நடந்தால் இந்திய ரசிகர்களுக்குத் தொலைக்காட்சி வழியாக நேரலையாகக் காண்பது எளிதாக அமையும்.
இதற்கு முன்பு ஐபிஎல் போட்டியை தென் ஆப்பிரிக்காவில் நடத்தியுள்ளார்கள். எனவே எங்கள் கோரிக்கையை பிசிசிஐ பரிசீலிக்கும் என நம்புகிறோம். இதற்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டால் அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருவோம். எங்களுக்கும் ஓரளவு வருமானம் கிடைக்கும் என்றார்.
இதற்கு முன்பு, 2009-ல் தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் போட்டி நடைபெற்றுள்ளது. 2014-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு வாரங்களுக்கு மட்டும் ஐபிஎல் நடைபெற்று மீதமுள்ள ஆட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் நடைபெற்றுள்ளன.
கரோனா பாதிப்பால் இலங்கையில் இதுவரை 230 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள். ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.