அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலையை ஒதுக்கிய தேர்தல் ஆணைய முடிவு செல்லும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தினகரன் தரப்பினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கொண்டாடிய நிலையில் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் இறுதியில் இரட்டை இலைச் சின்னம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினருக்கு சொந்தம் என
உத்தரவிட்டது.
இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலையை ஒதுக்கிய தேர்தல் ஆணைய முடிவு செல்லும் என்று தெரிவித்த நீதிபதிகள்,
தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தத் தீர்ப்பின் மூலம் உண்மையான அ.தி.மு.க. தாங்கள்தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தர்.
இரட்டை இலை வழக்கில் இனி மேல் முறையீட்டுக்கு வாய்ப்பில்லை என்று கூறிய அவர், 21 தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் என்றார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரியிலும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்