நாட்டின் 16 வது மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாவது அணி உருவாக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க் கிழமை டெல்லியில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்துக்குப் பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், மாபெரும் ஊழல்களுக்கும், கடுமையான விலைவாசி அதிகரிப்புக்கும் காரணமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழ்த்துவதற்காக 11 கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை ஒத்தக் கொள்கையை உடையதுதான் பாஜக என்று குறிப்பிட்ட அவர், ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் பாஜக என்றும், நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகுப்புவாத அரசியலின் பிரதிநிதியாக பாஜக விளங்குகிறது என்றும் சாடி உள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜகவுக்கு மாற்றாகவே 11 கட்சிகள் கொண்ட இக்கூட்டணி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், தங்களுடன் மதசார்பற்றக் கட்சிகள் இணையலாம் என்றும் காரத் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தலுக்குப் பின்னர் பேசுவது என முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது வெற்றி பெறுமா, சரியானதுதானா, தேவையானதா என்ற கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்கள் என்ற வகையில், மூன்றாவது அணிக்கான இந்த முயற்சி நமக்கு உவப்பையே அளிக்கிறது.
மாற்றங்களுக்கான முயற்சியே ஜனநாயகம் என்ற அரசியல் நெறிப்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
அந்த வகையில் மார்க்சிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி, அதிமுக, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 11 கட்சிகள் எடுத்துள்ள இந்த முயற்சி வரவேற்புக்கு உரியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மூன்றாம் அணி என்பது இந்தியாவுக்குப் புதியதல்ல. கடந்த 1989-91, !996 போன்ற ஆண்டுகளில் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட அரசியல் முயற்சிதான். அவற்றின் விளைவுகள் மிக மோசமானதாகவும் முடிந்துவிடவில்லை என்பதும் உண்மை.
தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மூன்றாம் உலகத்தைச் சூழ்ந்துள்ள நெருக்கடிகள், பல்வேறு நாடுகளையும் மாற்றுப்பாதைகளைத் தேடி ஓட வைத்திருக்கின்றன.
சர்வாதிகாரத்தில் இருந்தும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும், நிச்சயமற்ற தன்மையில் இருந்தும் விடுபட நினைக்கும் மூன்றாம் உலகத்தின் பலவீனமான நாடுகள், மாற்றுப்பாதையைத் தேடி உத்வேகத்துடன் ஓடத் தொடங்கி உள்ளன.
எகிப்து, லிபியா, சிரியா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, உக்ரைன் என அந்த நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
எகிப்தில் முகமது முர்சிக்கு எதிராக முகநூல் வழியாகவே மிகப்பெரிய புரட்சி நடந்து விட்டதாக, நவீனச் சிந்தனையாளர்கள் அடைந்த புளகாங்கிதம் அற்ப ஆயுளிலேயே முடிந்து விட்டது.
மற்ற நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் ஏற்கனவே இருந்தவர்கள் பதவிகளில் இருந்து அகற்றப்பட்ட பின்னரும், மாற்றமும் நிகழவில்லை. அமைதியும் நிலவவில்லை.
தனி்ப்பட்ட நபர் மீது இருந்த வெறுப்புணர்ச்சியும், குறிப்பிட்ட ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டமுமாக அவை குறுகிப் போனதுதான் இத்தகைய ஸ்திரமற்ற நிலைக்குக் காரணம்.
முழுமையாக அரசியல் படுத்தப்படாத எந்த ஒரு போராட்டமும், கிளர்ச்சியும், அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதில்லை என்பதே, வரலாறு நெடுகிலும் நமக்குக் காணக்கிடைக்கிற உண்மை.
அந்த வகையில், மாற்றுப்பாதை என்பது, மாற்று அரசியல்தான் என்பதை மூன்றாவது அணியை முன்னெடுக்கும் நமது தலைவர்கள் புரிந்து கொண்டிருப்பது ஓர் ஆறுதலான அம்சம்.
சுதந்திர இந்திய வரலாற்றில், காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து ஆட்சி நடத்திய முந்தைய காலக்கட்டங்களைக் காட்டிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அக்கட்சி தலைமை தாங்கி ஆட்சி நடத்திய கடந்த பத்து ஆண்டுகள் முற்றிலும் வேறுபட்ட காலக்கட்டமாகும்.
நேரு, இந்திரா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரது ஆட்சிக்காலங்களில், சர்வ வல்லமை படைத்த காங்கிரஸ் ஆட்சியாகவே அவர்களது அரசுகள் கோலோச்சின.
கடந்த பத்து ஆண்டுகள் அப்படி அல்ல.
2004 – 2009 ஆட்சிக்காலத்தில் இடதுசாரிகள் கணிசமான வலிமையுடன் கூட்டணியில் இருந்தனர்.
பொது வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டு, ஆண்டுக்கு 100 நாள் வேலைத்திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சட்டங்கள் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இடதுசாரிகளின் நெருக்கடி காரணமாக அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயம் போன்ற நடவடிக்கைகள் சிறிது காலம் ஒத்திவைக்கப்பட்டன. உண்மையிலேயே இடதுசாரிகள் மேலும் சில ஆண்டுகளோ, தொடர்ந்தோ அதே கூட்டணியில் நீடித்திருந்தால் இதுபோன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் ஓரளவு தடுக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி, இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியது, இந்திய வரலாற்றில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை என அனைத்து அம்சங்களிலும், எந்த வேகத்தடையுமின்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மோசமான மாற்றங்களைக் கொண்டுவரத் தொடங்கியது.
திமுகவைப் பொறுத்தவரை அவ்வப்போது எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து போன்ற மிகச்சில பண்பாட்டு ரீதியான திட்டங்களைச் சாதித்துக் கொள்ள முடிந்ததே தவிர, பெரிய அளவில் எதையும் செய்துவிட முடியவில்லை. ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட சேதுசமுத்திரத் திட்டத்தையே திமுகவினால் தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனது.
தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் போன்ற கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளுக்கு, ஆதாய அரசியலைத் தவிர கொள்கை ரீதியான வேறு நோக்கமோ, விருப்பமோ இருக்கவில்லை.
இந்த நிலையில்தான் தற்போது மூன்றாவது அணி அமைக்கப் பட்டுள்ளது. முன்னரைப் போலவே மாற்றுப் பொருளாதாரம், மதச்சார்பின்மை உள்ளிட்ட பொதுவேலைத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி முன்மொழிந்திருக்கிறது.
இடதுசாரிகளைத் தவிர அரசியல் மாற்றுக்கான பொதுவேலைத் திட்டத்தை இந்த அணியில் வேறு யாரும் முன்மொழியப் போவதில்லை. காங்கிரஸ், பாரதிய ஜனதா அணிகளில் இடம்பெறுவதில் உள்ள சிக்கல் என்பதைத் தவிர அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு மாற்று அரசியல் மீதான பார்வையோ, அக்கறையோ துளியும் இருக்க வாய்ப்பில்லை.
எனவே, கொள்கையளவில் இடதுசாரிகள் இந்த அணிக்குத் தலைமை தாங்கி, தேர்தல் களத்தில் மாற்று அரசியலுக்கான தேவையை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கும் பணியை மேற்கொண்டால் மட்டுமே, இந்த முயற்சிக்கு குறைந்து பட்ச தேவையோ, அர்த்தமோ இருக்க முடியும்.
மற்றபடி, தேவகவுடா, முலாயம்சிங், ஜெயலலிதா போன்ற தலைவர்களை அருகில் வைத்துக்கொண்டு மாற்று அரசியலை முன்னெடுப்பது, மண்குதிரைகள் மீது மேற்கொள்ளும் பயணமாகவே முடியும்.
இந்த அணியில், இடதுசாரிகளைத் தவிர, நிதிஷ்குமார் மட்டுமே மாற்று அரசியலுக்கான பாதையைக் கோரும் ஆளுமைத் திறன் கொண்டவர் என்பதுதான் உண்மை.
இடதுசாரிகள் இதனைக் கவனத்தில் கொள்ளாவிட்டால், தற்போது அவர்கள் முன்னெடுத்திருக்கும் மூன்றாம் அணி என்பது வெறும் சந்தர்ப்பவாதக் கூட்டணியாக முடிந்து போகும் அபாயம் இருக்கிறது.