இஸ்ரேலில் பென்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய அரசு: அரசியல் குழப்பத்திற்கு தீர்வு..

மேற்காசிய நாடான இஸ்ரேலில், 18 மாதங்களாக நீடித்து வந்த அரசியல் பிரச்னை, நேற்று தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைந்தது.

இஸ்ரேலில் அதிக ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்த பெருமைக்கு உரியவர் பெஞ்சமின் நேதன்யாகு, 70. கடந்தாண்டு,

ஏப்ரலில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதற்கு பின், செப்டம்பரில் நடந்த தேர்தலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, சமீபத்தில் மீண்டும் தேர்தல் நடந்தது. இதிலும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம்இல்லை.

இந்நிலையில், பெஞ்சமின் நேதன்யாஹு தலைமையிலான லிக்குட் கட்சிக்கும், பென்னி கான்ட்ஸ் தலைமையிலான, புளூ அண்டு ஒயிட் கட்சிக்கும் இடையே சமீபத்தில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.
தன்படி, ‘முதல், 18 மாதங்கள் நேதன்யாகு பிரதமராக இருப்பார். பென்னி கான்ட்ஸ், ராணுவ அமைச்சராக இருப்பார்.

18 மாதங்களுக்குப் பின், பென்னி கான்ட்சிடம், பிரதமர் பதவியை, நேதன்யாகு ஒப்படைக்க வேண்டும்’ என, முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பெஞ்சமின் நேதன்யாகு தலைமையில், புதிய கூட்டணி அரசு நேற்று பதவியேற்றது. பென்னி கான்ட்ஸ், ராணுவ அமைச்சராக பதவியேற்றார். இவர்களுடன், அமைச்சர்களும்பதவியேற்றனர்.